search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனித்து போட்டி"

    கூட்டணி அமையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். #TTVDhinakaran #ParliamentElection
    சேலம்:

    சேலத்துக்கு வந்த டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா இறந்த பின்னர் அவர் குற்றவாளி என்பதால் நினைவிடம் கட்டக்கூடாது எனவும், உயிரோடு இருந்திருந்தால் சிறைக்கு சென்று இருப்பார் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விட்டு வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி ஊழல் ஆட்சி எனக்கூறி கவர்னரை சந்தித்து மனுவும் கொடுத்தனர்.

    இவ்வாறு பேசியவர்களுடன் கூட்டணி வைக்கும் இவர்களை (எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்) ஜெயலலிதாவின் ஆன்மா கூட மன்னிக்காது. இது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்.

    இந்த கூட்டணி பலவீனமான கூட்டணி. 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும். அவர்களின் கூட்டணி தற்கொலைக்கு சமமான கூட்டணி. அ.தி.மு.க.வின் கூட்டணி அறிவிப்பு தோற்றுப்போகிறவர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ஆகும். சந்தர்ப்பவாதிகளான இவர்கள் வெற்றி பெறுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். தேர்தலுக்கு பின்னர் இவர்களுடன் (அ.தி.மு.க.) கூட்டணி சேர்ந்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.



    டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சமூகநீதி போராளிகள் என்று நினைத்தேன். அவர்கள் இவ்வாறு செய்வார்கள் என்று நினைக்கவில்லை. மேலும் பா.ம.க.வினர் என்ன நினைப்பார்கள்? என்பது தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்காக ஒன்றாக சேர்ந்துள்ள இவர்கள் இடுப்பில் கல்லைக்கட்டிக்கொண்டு கிணற்றில் குதிக்கப்போகிறார்கள்.

    அ.ம.மு.க. கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறேன். கூட்டணி அமையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்களுடன் தான் உள்ளனர். எங்களுக்கு கிளைகள் இல்லாத ஊர் எதுவும் இல்லை. அந்த வகையில் கட்சியை வளர்த்துள்ளோம்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காது. இதனால் பிரதமர் யார்? என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #ParliamentElection

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது.

    வழக்கம்போல அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி உள்ளது.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த அணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாக நிலவியது. அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் சேர மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்த கமல்ஹாசன் காங்கிரஸ் பக்கம் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    டெல்லி சென்று ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் பேசியதால் காங்கிரஸ் அணியில் நிச்சயமாக அவர் இருப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அவர் எந்த அணியிலும் சேராமல் தனித்து போட்டியிட தயாராகி வருவது உறுதியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று எண்ணியவன் அல்ல. ஆனால், நான் அரசியலுக்கு வர வேண்டிய கால சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இது ஒரு கடினமான பணி என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. சினிமாவும் கூட கடினமான பணிதான். இருந்தாலும் அதில் நான் அனுபவித்து பணிகளை செய்தேன். சினிமா வாழ்க்கை சிறப்பாக அமைந்தது.

    அதே போன்று அரசியலும் இருக்கும். மக்கள் என் மீது அளவு கடந்த அன்பு காட்டுகிறார்கள். எங்கள் எண்ணத்தை நிறைவேற்றும் நிலை உருவாகும்.

    மக்கள் நீதிமய்யம் கட்சியின் பெயர், சின்னம், கொடி போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்ல 5 ஆண்டுகள் வரை ஆகும் என்று நினைத்தோம். ஆனால், அதை முறியடித்து இருக்கிறோம்.

    இப்போது அனைத்து கிராமங்களிலும் கூட நாங்கள் பிரபலம் அடைந்து இருக்கிறோம். அதாவது எல்லா இடங்களிலும் எங்களது கட்சி சென்றடைந்துள்ளது.

    கிராம சபை கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி நேரடியாக மக்களை சந்தித்து வருகிறோம். இதன் மூலம் அடிமட்ட மக்களை சென்றடைந்து வருகிறோம். எங்கள் திட்டங்களைத்தான் இப்போது பல கட்சிகளும் காப்பி அடிக்கின்றன.

    எங்களுக்கு தடை ஏற்படுத்த பல முயற்சிகள் நடக்கின்றன. எங்களது கூட்டத்துக்கு அனுமதி தருவது போன்றவற்றில் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள்.

    அதே நேரத்தில் நான் எங்கு சென்றாலும் என்னை பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் பல லட்சம் மக்களை நான் சந்தித்து விட்டேன்.

    நான் சிறு வயதில் இருந்தே இது போன்ற கூட்டங்களை பார்த்து பழக்கப்பட்டு உள்ளேன். கடந்த காலங்களில் மக்கள் என்னை சந்தித்ததற்கும், இப்போது சந்திப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

    அன்று என்னை சினிமா நடிகர் என்ற அடிப்படையில் பார்ப்பதற்கு கூடினார்கள். இப்போது அதில் மாற்றம் உள்ளது. என்னை முக்கிய தலைவராக கருதி பார்க்கிறார்கள்.

    பல மக்கள் என்னை ஒரு தலைவராக பார்த்ததால் தான் நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை உருவானது. என்னை தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது உறுதி. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம். நம்பிக்கையோடு களம் இறங்குகிறோம்.

    எங்களுடைய சக்தி இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்புகிறோம். நிச்சயமாக சாதனை செய்வோம்.

    எங்களுடனும் கூட்டணி சம்பந்தமாக பலர் பேசுகிறார்கள். சில கட்சிகளை பொறுத்தவரை எங்களால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுடன் கூட்டணி வைப்பதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    மக்கள் ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம். ஆனால், யாரையும் எங்கள் தோளில் சவாரி செய்ய அனுமதிக்க மாட்டோம்.

    தி.மு.க.வுடனோ அல்லது அ.தி.மு.க.வுடனோ கூட்டணி கிடையாது என்பது எங்களது உறுதியான எண்ணம்.

    காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோமா? என்பது பற்றிய வி‌ஷயத்தில் தமிழ்நாடு நலன் தான் எங்களுக்கு முக்கியம்.

    மாநில நலனுக்கு எதிராக எந்த ஒரு முடிவையும் நாங்கள் எடுக்க மாட்டோம். எதுவாக இருந்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து முடிவுகள் இருக்கும்.

    நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடத்தான் விரும்புகிறோம். இதில், எந்த மாற்றமும் இருக்காது. நாங்கள் மற்றவர்களுக்காக தியாகம் செய்ய முடியாது.

    நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொன்னது எனது கட்சியை குறிப்பிட்டு தான் சொன்னேன். நான் போட்டியிடுவேனா? இல்லையா? என்பது சூழ்நிலைகளை பொறுத்தது. தேவைப்பட்டால் நானும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.

    எங்கள் கட்சியில் 25 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வேட்பாளராக நிறுத்துவோம்.

    தேர்தலில் எங்களுக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பது பற்றிய வி‌ஷயத்தில் மற்ற கட்சிகளுக்கு நாங்கள் கடுமையான சவால் ஏற்படுத்துவோம். நாங்கள் ஆழமாக ஊடுருவி செல்வோம்.

    ஊழல் புகார் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, அ.தி.மு.க.- தி.மு.க. இருகட்சிகளுமே தவறு செய்துள்ளன.

    அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை இது அகற்றப்பட வேண்டிய ஒன்று. இந்த அரசால் தமிழ்நாட்டில் பேரழிவும், தோல்விகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    அதேபோல் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு மதச்சார்பற்ற தன்மையையும், சகிப்புத்தன்மையையும் சீரழித்து வருகிறது. நாட்டின் நிலைமையே இந்த ஆட்சியால் சீர்குலைந்து இருக்கிறது.

    பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்கவில்லை. ஆனால், அந்த கட்சி, ஆட்சியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு காரணமாக இருக்கின்றன.



    ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டுமா? என்ற வி‌ஷயத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஒருநபரை முன்னிறுத்தி எதுவும் சொல்ல முடியாது.

    ஆனால், ஒரு மனிதன் மட்டுமே நாட்டை நடத்தி சென்று விட முடியாது. அது ஒரு இயக்கமாக இருக்க வேண்டும். அதற்கு ராகுல்காந்தியை பயன்படுத்தி கொள்ளலாம். சிறந்த இந்தியாவை உருவாக்குவதற்கு ஒரு கருவி வேண்டும்.

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி அமைந்தால் அது எங்களுக்கு சாதகமான வி‌ஷயம்தான். சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவது தான் எங்களது ஒரே நோக்கம்.

    ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பழைய கட்சிகள் செய்கின்றன. அவர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்து பணத்தை சுரண்டி வைத்து இருக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் சாதாரண மக்களுக்கு எதிராக இருக்கின்றன. அந்த மக்களின் ஆதரவு எங்களை நோக்கி இருக்கும்.

    தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள்தான் சாதிக்க முடியும் என்று சொல்வது தவறான கருத்து. அன்றைய கால கட்டத்தில் அவர்களுடைய கொள்கைகள் தேவைப்பட்டு இருக்கலாம். எங்களை பொறுத்தவரையில் இந்தியை எதிர்க்கவில்லை. அதை திணிப்பதை மட்டும்தான் எதிர்க்கிறோம்.

    ஊழல் அனைத்து மட்டத்திலும் ஒழிக்கப்பட வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் இலவசம் என்பது கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்றவற்றில் மட்டும்தான் இருக்க வேண்டும். மது வியாபாரம் மூலம் சாராய மாபியாக்கள் ஆழமாக காலூன்றி இருக்கிறார்கள்.

    மதுவிலக்கு அமலுக்கு கொண்டு வருவது அவசியமானது. இதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை அழிக்க முடியும்.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சம்பந்தமான வி‌ஷயத்தில் அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அது அவருடைய தனிப்பட்ட வி‌ஷயம்.

    ஜெயலலிதா மரணம் சில சந்தேகங்களை உருவாக்கி இருக்கிறது. ஜெயலலிதா மரணம் மட்டும் அல்ல, கொடநாடு கொலை விவகாரம் உள்ளிட்ட அனைத்து சம்பவங்கள் பற்றியும் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு வயதான பெண் என்னிடம் நடந்து வந்து மற்றவர்களை போல் நீயும் என்னை ஏமாற்றி விடாதே? என்று கூறினார்.

    இதேபோல் மக்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக என்னை சந்திக்கிறார்கள். மாநிலத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறோம். அதை சிறப்பாக செயல்படுத்துவது எங்களது ஒரே நோக்கமாக இருக்கும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என ராகுல் காந்தி இன்று அறிவித்துள்ளார். #Congress #RahulGandhi #Parliamentelection
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் இருநாள் சுற்றுப்பயணம் செய்யும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் லக்னோ நகரை வந்தடைந்தார்.

    விமான நிலையத்தில் உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.



    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில தலைவராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சிறந்த உழைப்பாளியான அவருடன் இணைந்து பணியாற்றும் நாளை நான் எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

    உத்தரப்பிரதேசம் (மேற்கு) மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதிராதித்யா சிந்தியாவும் சிறப்பாக செயல்பட கூடியவர் என புகழாரம் சூட்டினார்.

    ‘வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு இருக்கும் ஒரே பொதுநோக்கம் மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் நோக்கமும் இதுதான். இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமளிக்காதது தொடர்பாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்களுக்கு எந்த வகையில் எங்கள் கட்சியின் உதவி தேவைப்பட்டாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.

    ஆனால், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நான் முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது என்பதால் எங்கள் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் இங்குள்ள 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்’ எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார். #Congress #RahulGandhi  #Parliamentelection 
    இனி வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வல்லமை அ.தி.மு.க.வுக்கு உண்டு என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #BJP
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் மின்வெட்டு ஏற்படவில்லை. போதுமான நிலக்கரியை கையிருப்பு வைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது சம்பந்தமாக நானும் மத்திய அரசிடம் பேசி நிலக்கரியை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளேன்.

    பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகள் 2 ரூபாய் மட்டும் குறைப்பதால் எந்தவித பயனும் இல்லை. 65 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை இன்று 85 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதன் விலையை குறைக்கும் அதிகாரம் முழுமையாக மத்திய அரசின் கையில்தான் உள்ளது, அது மத்திய அரசின் கடமையும் கூட.

    புதிய செஸ் வரி மூலம் மத்திய அரசுக்குத்தான் பலன் கிடைக்கும். மாநில அரசுக்கு எந்த பலனும் இல்லை. ஜி.எஸ்.டி.யை அ.தி.மு.க. முழுமையாக எதிர்த்து வந்துள்ளது. ஜி.எஸ்.டி.யால் மாநில சுயாட்சி, மாநில அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவும் ஜி.எஸ்.டி. வரியை கடுமையாக எதிர்த்தார். நாங்களும் நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி.யை ஆதரித்து வாக்களிக்கவில்லை. இதுபோன்ற மாநில அரசின் சுயாட்சியை பறிக்கும் வகையில் தான் காங்கிரசும் ஆட்சி செய்தது. ஆனால் 18 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுத்த தி.மு.க. எதையும் கண்டு கொள்ளவில்லை.


    2016 பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா 39 தொகுதிகளில் போட்டியிட்டு 38-ல் வெற்றி பெற்றார். அதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக தி.மு.க.தான் நாடகமாடுகிறது. அ.தி.மு.க. பா.ஜ.க.வின் துணையின்றி தனித்தே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இனியும் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும். அதற்கான வல்லமை அ.தி.மு.க.வுக்கு உண்டு.

    பா.ஜ.க.வுடன் கூட்டணிக்காக அமித்ஷா வீட்டு கதவை நாங்கள் தட்டவில்லை, அதேபோல் எங்களுடன் கூட்டணி வைக்க எங்கள் கதவையும் யாரும் தட்டவில்லை. மத்திய அரசுடன் நட்புடன் இருக்கிறோம். அதற்காக மத்திய அரசை கண் மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. பா.ஜ.க. எங்களை விமர்சிப்பதால் நாங்களும் அவர்களை விமர்சிக்கிறோம். இதைத்தான் எங்களுக்கு ஜெயலலிதா கற்றுக்கொடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #BJP
    கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்து போட்டியிடும் என்ற தேவேகவுடாவின் அறிவிப்பால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது. #DeveGowda #JDS #Congress
    பெங்களூர்:

    மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா பெங்களூரில் நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது பற்றி மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவுடன் பேச்சு நடத்தினேன்.

    உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைத்தால் இரு கட்சி தொண்டர்களிடமும் குழப்பம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிடும்.

    ஆட்சி செய்வதில் இரு கட்சிகளின் கூட்டணி நீடிக்கும். அதில் எந்தவித குழப்பமும் இல்லை. எனவே தனித்து போட்டியிடுவதால் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிடுவது பற்றி நிர்வாகிகளிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்களது முடிவை அறிய நான் வருகிற 11-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய உள்ளேன். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியிடப்படும்.



    நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன். எனவே எங்கள் கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படாது.

    உள்ளாட்சி தேர்தலுக்காக மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார். #DeveGowda #JDS #Congress

    சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 180 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான முழு திட்டமும் ரஜினியிடம் இருப்பதாக மக்கள் மன்றத்தின் உயர்மட்ட குழு நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    ரஜினி மக்கள் மன்றத்துக்கு 150 தொகுதிகளில் செல்வாக்கு உள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளதே என்று நேற்று முன்தினம் பேட்டி அளித்த ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த அவர், ‘அது உண்மை என்றால் மகிழ்ச்சி தான்’ என்றார். ரஜினி இப்படி கூறினாலும் அவரிடம் 180 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான முழு திட்டமும் கையில் இருப்பதாக மக்கள் மன்றத்தின் உயர்மட்ட குழு நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 34 சதவீதம் ரஜினி ரசிகர்கள் என்று கூறும் அவர் 15.02 சதவீதம் பேர் புதிய வாக்காளர்கள் என்று புள்ளி விவரத்தையும் தெரிவித்திருக்கிறார்.

    இவர்களில் குறைந்தது 10 சதவீத வாக்குகளாவது நமக்கு வர வேண்டும் என்று ரஜினி திட்டமிட்டுள்ளார். 20ல் இருந்து 22 சதவீத வாக்குகள் பிற கட்சிகளில் இருந்து வரும் என எதிர்பார்க்கிறார்.

    அப்படி ரஜினி பார்த்தால் குறைந்தது 80 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் நம்புகிறார்கள். பலமான கூட்டணி, ஓட்டுக்கு பணம் போன்றவை குறுக்கிட்டாலும் கூட குறைந்தது 65 சதவீத வாக்குகளாவது நமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். 80 சதவீத வாக்குகளுக்கு குறி வைத்து வேலை செய்தால் தான் 60 சதவீத வாக்குகளை பெற முடியும் என்பதே ரஜினியின் கணக்கு. தனித்து போட்டி என்பதை மனதில் வைத்து தான் இந்த திட்டங்கள் எல்லாம் உருவாக்கப்படுகின்றன.

    ரஜினியின் கட்சியோடு சில கட்சிகள் கூட்டணி வைத்தால் இந்த வாக்கு சதவீதம் உயரும். எனவே 180 முதல் 200 சீட்டுகள் வரை கண்டிப்பாக வெல்லலாம் என்பதே ரஜினியின் வியூகம். இதற்காக தமிழ்நாடு முழுக்க தொகுதி வாரியான கணக்கெடுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன.

    தேர்தல் வரும்போது கட்சி தொடங்குவது தான் நல்லது. இப்போதே கட்சி தொடங்கினால் காலப் போக்கில் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதை வைத்து செல்வாக்கு குறையலாம். ஆனால் இந்த பரபரப்பை அப்படியே கொண்டு சென்று சரியாக தேர்தலுக்கு முன்பு கட்சியை தொடங்குவதே சிறந்தது என்றும் ரஜினி முடிவு செய்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram

    ×